< Back
தேசிய செய்திகள்
உப்பள்ளியில்  இளம்பெண் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
தேசிய செய்திகள்

உப்பள்ளியில் இளம்பெண் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

உப்பள்ளியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் நவநகர் பலிகார் ஓனி பகுதியை சேர்ந்தவர் நவீன் பட்டீல் (வயது28). இவர் உப்பள்ளி டவுனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடன் உப்பள்ளி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். அது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி நவீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பல இடங்களுக்கு இளம்பெண்ணை, வாலிபர் அழைத்து சென்றுள்ளார். மேலும் இளம்பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் இளம்பெண்ணை, நவீன் மிரட்டி உள்ளார். இதனால் இதுபற்றி இளம்பெண் வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

வாலிபர் கைது

இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர், உப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி இளம்பெண்ணிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது தன்னுடன் பணிபுரியும் நவீன் தான் தன்னை கர்ப்பமாக்கினார் என கூறி அழுதுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் நவநகர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர். மேலும் அவரை போலீசார் உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்