< Back
தேசிய செய்திகள்
திரிஷ்யம் பட பாணியில் கணவரை கொன்று புதைத்து கழிவுநீர் தொட்டி கட்டிய பெண்..!!
தேசிய செய்திகள்

'திரிஷ்யம்' பட பாணியில் கணவரை கொன்று புதைத்து கழிவுநீர் தொட்டி கட்டிய பெண்..!!

தினத்தந்தி
|
17 Jan 2023 4:37 AM IST

டெல்லி அருகே கணவரை கொன்று புதைத்து அதன் மீது கழிவுநீர் தொட்டி கட்டிய பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

காஜியாபாத்,

டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரில் வசிக்கும் சோட்டேலால் என்பவர், கடந்த 10-ந்தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பாலை (வயது 42) ஒரு வாரமாக காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

கள்ளக்காதல்

இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார்.

சதீஷ்-நீத்து குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க அவர்கள் தீர்மானித்தனர்.

உடல் பாகங்கள் தோண்டி எடுப்பு

அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டிவிட்டனர்.

கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தநிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

கைது

கள்ளக்காதலனுடன் பெண் நீத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.

'திரிஷ்யம்' பட பாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்