தார்வாரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
|தார்வாரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை மர்ம நபர்கள் கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வருவதாக டவுன் போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த திருட்டு வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா ஓசூர் கிராமத்தை சேர்ந்த சச்சின் கிரிசாகர் (வயது 28), தார்வார் ராஜீவ்காந்திநகரை சேர்ந்த விட்டல் சிவப்பனவர் (32), தார்வார் டவுன் நவலூர் கிராமத்தை சேர்ந்த சுனில் ஜாம்போடி (29) என்று தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் சாலையோரம் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்தது தெரியவந்தது. விசாரணையில் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.4.80 லட்சம் மதிப்பிலான 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து தார்வார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.