< Back
தேசிய செய்திகள்
தட்சிண கன்னடாவில். பருவமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க 24 மணி நேர கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும்
தேசிய செய்திகள்

தட்சிண கன்னடாவில். பருவமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க 24 மணி நேர கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
24 May 2022 3:46 PM GMT

தட்சிண கன்னடாவில், பருவ மழையின்போது ஏற்படும் பாதிப்பு குறித்து புகார் அளிக்க 24 மணி நேரம் செயல்படும் கண்காணிப்பு மையம் அமைக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி சுனில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு;

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு மற்றும் கடலோரம், மலைநாடு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள் மழை நீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளது.

இந்த நிலையில் பருவ மழையின் போது எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பு மந்திரி சுனில்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திரா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் மந்திரி சுனில்குமார் கூறியதாவது:-

கண்காணிப்பு மையம்

வரும் பருவ மழையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தியுள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டத்திலும் பருவமழையின்போது பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க 24 மணி நேரம் செயல்படும் கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும். இந்த கண்காணிப்பு மையங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதன்படி அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை கேட்டு உடனடயாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சார்மடி, சிராடி, சம்பாஜே மலைப்பகுதிகளில் மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். சாலைகளில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை உடனே சீரமைக்கவேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுடையது.

முன்னேற்பாடுகள்

மழையால் மின் கம்பம், மரங்கள் முறிந்து விழுந்தாலோ, மின்சாரத் தடை ஏற்பட்டாலோ அதற்கு நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை காலத்தில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த மாதம் ஜூன் 1-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மங்களூரு வருகை தர இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்