தட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி
|தட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா அருகே கோடியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண கவுடா(வயது 67). இவர் பெல்லாரே போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தான் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது தன்னிடம் வந்து ஒருவர் பேச்சு கொடுத்தார்.
அப்போது அவர் தான் ஒரு வங்கி அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார். மேலும் அவர் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கு உங்கள் பெயர் தேர்வாகி இருக்கிறது என்று கூறினார். அந்த பணத்தை பெற ரூ.7 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதை நம்பி நான்(ராதாகிருஷ்ண கவுடா) என்னிடம் இருந்த 5 கிராம் தங்க மோதிரத்தை கொடுத்தேன். அந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை கண்டுபிடித்து என்னுடைய மோதிரத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோல் குட்மூரு பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்ற பெண்ணிடமும் ஒரு மர்ம நபர் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பணம் வழங்கப்பட்டு வருவதாக கூறி ரூ.31 ஆயிரத்தை மோசடி செய்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.