சித்ரதுர்காவில் நிலத்தகராறில் பெண் அடித்து கொலை
|சித்ரதுர்காவில் நிலத்தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு-
சித்ரதுர்காவில் நிலத்தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இரும்பு கம்பியால் தாக்குதல்
சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா லட்சுமிதேவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலக்ஷம்மா (வயது 35). இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. பாலக்ஷம்மா நிலத்தின் அருகே ராஜப்பா என்பவருக்கும் நிலம் உள்ளது. இந்தநிலையில் நில பிரச்சினை தொடர்பாக அவர்கள் 2 பேர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்்த சில நாட்களுக்கு முன்பு பாலக்ஷம்மா தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ராஜப்பா அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் லட்சுமிதேவரஹள்ளி கிராமம் அருகே பாலக்ஷம்மா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் பாலக்ஷம்மாவை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேருக்கு வலைவீச்சு
ஆனால் பாலக்ஷம்மா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலக்ஷம்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், நிலத்தகராறு காரணமாக பாலக்ஷம்மாவை, ராஜப்பா தனது நண்பர்கள் சந்திரசேகர், நாகராஜ், பசவராஜ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.