சிக்கமகளூருவில் சிறுத்தை கூண்டில் சிக்கியது
|சிக்கமகளூருவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சிறுத்தை அட்டகாசம்
சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா பகுதியில் வீட்டு வசதி குடியிருப்பு பகுதி உள்ளது. இதன் அருகே சுர்சேகுட்டா வனப்பகுதி உள்ளது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி வீட்டு வசதி குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்தது.
அவ்வாறு வரும் சிறுத்தை அந்தப்பகுதியில் உள்ள கால்நடைகளை அடித்து கொன்று வந்தது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் பீதியில் உள்ளனர்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி வீட்டு வசதி குடியிருப்பு வாசிகள் சிக்கமகளூரு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோர்ட்டு அருகே இரும்பு கூண்டை வைத்தனர்.
சிறுத்தை சிக்கியது
மேலும் கூண்டில் சிறுத்தையை பிடிக்க இறைச்சியை வைத்து இருந்தனர். மேலும் அந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை கூண்டில் இருந்த இறைச்சியை சாப்பிட வந்தபோது, அந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.
இதுபற்றி அறிந்ததும் அந்தபகுதி மக்கள் சிக்கமகளூரு வனத்துறையினருக்கு தகவல் தொிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னா் வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றிக் கொண்டு முத்தோடியில் உள்ள பத்ரா வனவிலங்குகள் சரணாலயத்தில் சிறுத்தையை கொண்டு சென்று விடுவித்தனர்.
மக்கள் நிம்மதி
அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கூண்டில் சிக்கியது 4 வயது ஆண் சிறுத்தை என வனத்துறை அதிகாாி ஒருவர் தொிவித்தார்.