சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம்
|சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
சிக்கமகளூரு :-
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா முஜேகான் கிராமத்தை சோ்ந்தவர் மரிகவுடா (வயது 60). விவசாயி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இவர் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை ஒன்று மரிகவுடாவை முட்டியது. இதில் தூக்கி வீசப்பட்ட மரிகவுடா அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் விடாமல் துரத்தி சென்ற காட்டெருமை மரிகவுடாவை தாக்கியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மரிகவுடா கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.
சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்த கூலி தொழிலாளிகள் ஓடி வந்து காட்டெருமையை வனப்பகுதிக்குள் துரத்தி அடித்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த மரிகவுடாவை மீட்ட அவர்கள் கலசா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது விவசாயிகள், தொழிலாளிகள் வனத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து காட்டெருமை, காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.