< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில்  காய்கறி கடையில் 30 கிலோ தக்காளி திருட்டு
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் காய்கறி கடையில் 30 கிலோ தக்காளி திருட்டு

தினத்தந்தி
|
13 July 2023 12:15 AM IST

சிக்கமகளூருவில் காய்கறி கடையில் 30 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் காய்கறி கடையில் 30 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

தக்காளி

நாட்டில் தற்போது தக்காளி விலை விண்ணை தொடும் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஒரு கிேலா தக்காளி விலை ரூ.100-க்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் தக்காளி பேசும் பொருளாக மாறி உள்ளது. விலை உயர்ந்துள்ளதால் தக்காளி திருடப்படும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் சரக்கு வாகனத்துடன் 2 டன் தக்காளியை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

மேலும் ஹாவேரியில் தக்காளி திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா உதவியுடன் வியாபாரி வியாபரம் செய்து வருகிறார். இந்த நிலையில், சிக்கமகளூருவில் 30 கிலோ தக்காளி திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

30 கிலோ தக்காளி திருட்டு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெேர தாலுகா ஆல்தூர் பகுதியை சேர்ந்தவர் நதீம். காய்கறி வியாபாரி. இவர் தனது கடையில் தக்காளி உள்ளிட்ட காய்கறியை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நதீம் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை அவர் கடைக்கு திரும்பி வந்தார். அப்போது கடையின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் 2 பெட்டிகளில் வைத்திருந்த 30 கிலோ தக்காளி மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து 30 கிலோ தக்காளியை திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.

வியாபாரிகள் பீதி

இதுகுறித்து நதீம், ஆல்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். விலையேற்றம் காரணமாக தக்காளி தொடர்ந்து திருடப்படும் சம்பவத்தால் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்