மைனர் பெண் பலாத்கார வழக்கில் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை
|மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தட்சிண கன்னடா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மங்களூரு;
மைனர் பெண் பலாத்காரம்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா மெல்கர் அருகே ஈரோ கிராமத்தில் மைனர் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த மைனர் பெண் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் வெளியே சென்று இருந்துள்ளார்.
இந்த நிலையில் மைனர் பெண்ணின் 55 வயது தந்தை, தனது மகள் என்றும் பாராமல் அவரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைனர் பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். இதையடுத்து சிறுமி, தாயிடம் நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக இதுகுறித்து பண்ட்வால் போலீசில் புகார் அளித்தார்.
15 ஆண்டுகள் சிறை
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் பெண்ணின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் பண்ட்வால் போலீசார் அதுதொடர்பான குற்றப்பத்திரிகையும் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி ராதாகிருஷ்ணா தீர்ப்பு கூறினார். அதில் பெற்ற மகளை, தந்தை பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.