பத்ராவதியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர்
|பத்ராவதியில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா-
பத்ராவதியில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் பொம்மன கட்டே பகுதியை சேர்ந்தவர் முஜாகித் (வயது35). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முஜாகித் அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். தற்போது அவருடன் முஜாகித் வசித்து வந்தார்.
இவர் மீது பத்ராவதி போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் முஜாகித்துக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சில கும்பல்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அந்த கும்பல்களுக்கும் முஜாகித்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வெட்டிக்கொலை
இந்தநிலையில், கடந்த 21-ந்தேதி இரவு 2-வது மனைவியின் வீட்டிற்கு முஜாகித் சென்றபோது அந்த வழியாக வந்த மர்மகும்பல் அரிவாளால் முஜாகித்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே முஜாகித் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேப்பர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்்தனர். இந்த வழக்கு தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா தலைமையில் தனிப்படையும் அமைப்பட்டது.
5 பேர் கைது
அவர்கள் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், ரவுடி கொலை வழக்கில் பத்ராவதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (33), ஒசமனே பகுதியை சேர்ந்த சுரேந்திரா (36), மஞ்சுநாத் 33, பூதனகுடியை சேர்ந்த விஜயகுமார் 25, பாரந்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (23) ஆகிய 5 பேரை பேப்பர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு பத்ராவதி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் சந்தோஷ் குமார், சுரேந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சிறையில் அடைத்தனர்
இந்த வழக்கில் முஜாகித் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் பழிக்குப்பழி தீர்ப்பதற்காக சந்தோஷ் குமார், சுரேந்திரா அவர்களின் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து முஜாகித்தை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 5 பேரையும் போலீசார் பத்ராவதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.