பத்ராவதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
|பத்ராவதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹொலேஒன்னூர் பகுதியை சேர்ந்தவர் கவுரம்மா. இவர் அரெதொட்டலு கிராமம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கவுரம்மா கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கவுரம்மா ஹொலேஒன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், ஹொலேஒன்னூர் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பத்ராவதி தாலுகா ஒசமனே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் (வயது32), ஹாலப்பா பகுதியை சேர்ந்த ஜீவன் (23) என்பதும், அவர்கள் 2 பேரும் கவுரம்மாவிடம் தாலிசங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் பத்ராவதி தாலுகா மற்றும் மாவட்டம் முழுவதும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்து உள்ளனர். இதையடுத்து, போலீசார் ஹேமந்த், ஜீவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள், 1½ பவுன் தாலிசங்கிலி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.