< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில், விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்
தேசிய செய்திகள்

பெங்களூருவில், விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்

தினத்தந்தி
|
7 Feb 2023 2:14 AM IST

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறுவதையொட்டி நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது.

பெங்களூரு:-

விமான கண்காட்சி

பெங்களூருவில் வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. பெங்களூரு எலகங்கா விமான நிலையத்தில் நடைபெறும் இந்த விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளன.

அதாவது நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை என மொத்தம் 10 நாட்களுக்கு விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

நாளை முதல்...

இதில் நாளை முதல் வருகிற 11-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் விமானங்கள் இயக்கப்படாது.

அதுபோல் 12 மற்றும் 13-ந் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 13-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரையும், 14 மற்றும் 15-ந் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் 17-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படாது என்று பெங்களூரு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயிற்சியில் ஈடுபட வசதியாக...

சாகசத்தில் ஈடுபடும் விமானங்கள் அணிவகுத்து நிற்கவும், பயிற்சியில் ஈடுபடவும் வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்