< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில், காண்டிராக்டர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

பெங்களூருவில், காண்டிராக்டர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

பெங்களூருவில் திட்ட பணிகள் நடைபெற்று இருந்தால் காண்டிராக்டர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பதில் சொல்ல முடியாது

பெங்களூரு மாநகராட்சி காண்டிராக்டர்கள் சங்க நிர்வாகிகள், திட்ட பணிகளை செய்து முடித்த பிறகும் பணத்தை விடுவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறியுள்ளனர். பணிகள் செய்யப்பட்டு இருந்தால் நிச்சயம் அதற்குரிய பணம் விடுவிக்கப்படும். அந்த சங்க நிர்வாகிகள் கூறிய கருத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

திட்ட பணிகள் நடைபெற்று இருந்தால் அத்தகைய காண்டிராக்டர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பெங்களூரு மாநகராட்சியில் முன்பு என்னவெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரே நாளில் விண்ணப்பித்து மறுநாள் அதற்கு அனுமதி பெற்று 20 நாட்களில் பணியை முடித்துள்ளனர். அதற்குரிய பணத்தையும் பெற்றுள்ளனர்.

யாரிடமும் பேசவில்லை

ஒரே மாதத்தில் ரூ.1,000 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இது சாத்தியமா?. எனக்கும் அரசியல் தெரியும். காண்டிராக்டர்கள் யார் என்பதும் தெரியும். தற்போது குற்றம்சாட்டும் காண்டிராக்டர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

எதிர்க்கட்சிகள் இத்தகைய பிரச்சினைகளுக்காக காத்திருப்பது சகஜம். நான் காண்டிராக்டர்கள் யாரிடமும் பேசவில்லை. உண்மையிலேயே பணிகள் நடைபெற்று இருந்தால் அதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் சட்டப்படி பணிகளை ஆய்வு செய்வார்கள்.

அச்சுறுத்த முடியாது

பிறரை மிரட்டியதை போல் என்னை யாராலும் அச்சுறுத்த முடியாது. பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்திருப்பது குறித்து விசாரணை நடக்கிறது.

நீர்ப்பாசனத்துறையில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது. தற்போது ரூ.600 கோடி மட்டுமே உள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் ரூ.450 கோடி உள்ளது. திட்ட பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணம் கொடுக்க இயலாது. முதல்-மந்திரி சித்தராமையா நாளை(இன்று) பெங்களூரு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்