பெங்களூருவில், 108 வழக்குகளில் தொடர்பு:
|6 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது போலீசர் தீவிர விசாரணை
பெங்களூருவில் 108 வழக்குகளில் தொடர்பு இருந்ததுடன், 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக நிலம் விற்பனை
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே கடந்த 2009-10-ம் ஆண்டில் ஒரு தனியார் அமைப்புக்கு சொந்தமான நிலத்தை, வருவாய்த்துறை நிலமாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இது சட்டவிரோதமாக நடந்தது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை ஆஸ்வாக் அகமது என்பவர் வாங்கி மோசடி செய்திருந்தார்.
இதுதொடர்பாக ராமமூர்த்திநகர், வர்த்தூர், இந்திராநகர், அசோக்நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆஸ்வாக் அகமது மீது 108 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஆஸ்வாக் அகமது போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, ஆஸ்வாக் அகமது மீது பதிவான வழக்குகள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டு இருந்தது.
6 ஆண்டுகளாக தலைமறைவாக...
பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த ஆஸ்வாக் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சிறையில் இருந்து ஆஸ்வாக் அகமது ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஒரேயொரு முறை கோர்ட்டில் ஆஜராகிவிட்டு, அதன்பிறகு, தலைமறைவாகி விட்டார். கோர்ட்டில் ஆஜராகும்படி பலமுறை பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும், அவர் ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்தார்.
இதையடுத்து, ஆஸ்வாக் அகமதுவை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் 6 ஆண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஆஸ்வாக் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.