< Back
தேசிய செய்திகள்
பெல்தங்கடி தாலுகாவில்  காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
தேசிய செய்திகள்

பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மங்களூரு-

பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காட்டுயானைகள்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் பணிக்கல்லு கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை, காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியேறி பணிக்கல்லு கிராமத்திற்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட்டமாக கிராமத்திற்குள் புகுந்த யானைகள் அங்கு உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து தென்னை மற்றும் பாக்கு மரங்களை நாசப்படுத்திவிட்டு சென்றன.

இதில் ஏராளமான விளை பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள், கிராமமக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

காட்டுயானைகளை விரட்ட வேண்டும்

இந்தநிலையில், ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை தடுக்கக்கோரி வனத்துறையினருடன் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், பணிக்கல்லு கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு தென்னை, பாக்கு மரங்களை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராகவேந்திரா தோட்டத்திற்குள் காட்டுயானைகள் கூட்டம் புகுந்தன. அந்த யானைகள் தோட்டத்தில் இருந்து பாக்கு மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்தி கொண்டு இருந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வனத்துறையினர் முற்றுகை

பின்னர் அவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் காட்டுயாைனகள் தோட்டத்திற்குள்ளேயே கூட்டமாக நின்றன. இதையடுத்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதையடுத்து கிராமமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சில நாட்களாக பணிக்கல்லு கிராமத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் பீதி

இதனால் நாங்கள் வேலைக்கு செல்லமுடியவில்லை. மேலும் பீதியடைந்து உள்ளோம். எனவே காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடு்க்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர். காட்டுயானைகளை ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்