< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில்  சுத்தியலால் தாக்கி பெண் கொலை
தேசிய செய்திகள்

பெங்களூருவில் சுத்தியலால் தாக்கி பெண் கொலை

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

பெங்களூருவில் சுத்தியலால் தலையில் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு-

பெங்களூருவில் சுத்தியலால் தலையில் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகனுக்கு தகவல்

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கரேகல்லு அருகே குருபிரியா சவுத்ரி ரோட்டில் வசித்து வருபவர் நாகரத்னம், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிக்கதாய் (வயது 45). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது மகனான ராஜு மட்டும் தன்னுடைய பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். ஒரு தொழிற்சாலையில் ஊழியராக ராஜு வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் தான் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். அதுபோல், அவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் நாகரத்னம், சிக்கதாய் மட்டும் இருந்துள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராஜுவை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு, பெற்றோர் சண்டை போடுவதாக தகவல் தெரிவித்தார்கள்.

சுத்தியலால் தாக்கி கொலை

உடனடியாக அவர் தொழிற்சாலையில் இருந்து தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் தனது தாய் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை நாகரத்னம் தலைமறைவாகி இருந்தார். இதுபற்றி அவர் காமாட்சி பாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சிக்கதாய் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த நாகரத்னம் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நாகரத்னம் வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்தது தெரியவந்தது. குடிபோதையில் அவர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது

இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகரத்னத்தை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிபோதையில் பெண்ணை சுத்தியலால் தாக்கி கணவரே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்