காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆணவ கொலை; காதலன் தற்கொலை
|வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கோலார்-
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்
இந்த கொலை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை தாலுகா காமசமுத்திரா அருகே போடகுர்கி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). இவரது மகள் கீர்த்தி (20). அதே பகுதியை சேர்ந்தவர் கங்காதர் (24). இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கீர்த்திக்கும், கங்காதருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதுடன், செல்போனில் பேசியும், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் கீர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள், இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு
இதையடுத்து கங்காதர் நேரடியாக கிருஷ்ணமூர்த்தியிடமே சென்று கீர்த்தியும், தானும் காதலித்து வருகிறோம். எனவே கீர்த்தியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் கங்காதருடனான காதலை கைவிடும்படியும் கீர்த்தியிடம் கிருஷ்ணமூர்த்தி கூறி வந்துள்ளார்.
இருப்பினும் கீர்த்தியும், கங்காதரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதல் விவகாரம் தொடர்பாக கீர்த்திக்கும், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணமூர்த்தி, கங்காதருக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு கீர்த்தி எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கீர்த்தியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி துடி, துடித்து செத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காமசமுத்திரம் போலீசார் விரைந்து வந்து, கொலையான கீர்த்தியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கீர்த்தியை கொலை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து காமசமுத்திரம் போலீசார் ஆணவக்கொலை என வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலன் தற்கொலை
இதற்கிடையே காதலியை அவரது தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பற்றி அறிந்த காதலன் கங்காதர் மனம் உடைந்தார். தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலியே கொலை செய்யப்பட்டுவிட்டாரே என்ற சோகத்தில் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். அவர் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து கங்காதர் தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து காமசமுத்திரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை தந்தை ஆணவக் கொலை செய்ததும், இதனால் காதலன் ரெயில் முன் பாய்ந்த சம்பவமும் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.