சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக அசாம் தேயிலை தோட்டங்களில் உயர்நிலைப் பள்ளிகள்..!
|சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக அசாமின் தேயிலைத் தோட்டங்களில் உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சோனித்பூர்,
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் 6 ஆதர்ஷா வித்யாலயா மாதிரி பள்ளிகளை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று திறந்து வைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு அசாமின் தேயிலைத் தோட்டங்களில் உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அசாமில் உள்ள 96 தேயிலைத் தோட்டப் பகுதிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆதர்ஷா வித்யாலயா மாதிரி பள்ளிகளில் இதுவரை 14,594 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா தெரிவித்தார். அசாமின் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் 119 மாதிரி பள்ளிகளை அமைப்பதற்கான மாநில அரசின் முடிவின் ஒரு பகுதியாக, நஹாராணி தேயிலைத் தோட்டம், புல்பாரி மற்றும் சோனித்பூரில் உள்ள தாகூர்பாரி தேயிலைத் தோட்டங்களில் ஆதர்ஷா வித்யாலயா மாதிரி பள்ளிகளை அவர் திறந்து வைத்தார்.
ஸ்வாஹித் மங்கிரி ஒராங், லோக்நாயக் ஓமியோ குமார் தாஸ் மற்றும் ஸ்வாஹித் ஹேம்லால் கலிந்தி போன்ற பல்வேறு சமூக-கலாச்சார பின்னணியில் உள்ள புகழ்பெற்ற ஆளுமைகளின் பெயரால் இந்தப் பள்ளிகள் பெயரிடப்படும் என்று கூறிய அவர், இந்தப் பள்ளிகள் கல்விக்கு பெரும் ஊக்கத்தை அளித்து தேயிலை தோட்ட சமூகத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் என்று கூறினார்.
மேலும் அவர், ஒவ்வொரு பள்ளியிலும் எட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 15,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு முதல், இந்த ஆதர்ஷா வித்யாலயாக்களில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்திலும், சமூக அறிவியல் மற்றும் அசாமிய மொழிகள் அசாமிய மொழியிலும் கற்பிக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்கவும், உலகை ஆராயவும் உதவும் என்று கூறினார்.