குடிபோதை தகராறில் கட்டையால் அடித்து தமிழக வாலிபர் கொலை; 2 பேர் கைது
|உடுப்பி டவுனில், குடிபோதை தகராறில் கட்டையால் அடித்து தமிழக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு;
குடிபோதையில் தகராறு
தமிழ்நாட்டை சேர்ந்தவர் குமார்(வயது 32). இவர், உடுப்பி டவுனில் ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை குமார், உடுப்பி டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த குட்டி, நவீன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து கோவாவுக்கு செல்ல ரெயில் மூலம் மங்களூருவுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கோவாவுக்கு செல்லும் ரெயிலில் ஏறி அமர்ந்துள்ளனர்.
இதையடுத்து அந்த ரெயில் உடுப்பி ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. அப்போது ரெயில் புறப்பட நேரம் இருப்பதால் குட்டியும், நவீனும் அருகே இருந்த மதுக்கடைக்கு வந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குமார் மற்றும் குட்டி, நவீன் அறிமுகமாகி பேசியுள்ளனர். இதையடுத்து 3 பேரும் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் கடையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
கொலை
அப்போது குடிபோதையில் குமார், அவர்கள் 2 பேரில் ஒருவரின் தாய் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த 2 பேரும் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குமார், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கொலையான குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் குடிபோதையில் குமார், 2 பேரில் ஒருவரின் தாய் பற்றி அவதூறாக பேசியதால் அவர்கள் கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.