திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவமொக்கா-
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சொரப் டவுனில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
திருமணம்
சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் குப்பேகட்டே பகுதியை சேர்ந்தவர் பிரமோத். இவர் சொரப் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். பிரமோத்துக்கும், சொரப் டவுன் பகுதியை சேர்ந்த சவுமியாவுக்கும் கடந்த 26-ந் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் பிரமோத், சவுமியா சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி பிரமோத் இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து சவுமியா, பிரமோத்திடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவும் சவுமியா, பிரமோத் இடையே தகராறு ஏற்பட்டது.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது சவுமியாவை பிரமோத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சவுமியா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அப்போது தன்னை கணவர் அடித்து விட்டதாக பெற்றோரிடம் சவுமியா கூறினார்.
இந்தநிலையில், இதுகுறித்து சமாதானம் செய்ய சவுமியாவின் பெற்றோர் பிரமோத் வீட்டிற்கு சென்றனர். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் சவுமியா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் சவுமியா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து சொரப் டவுன் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
விசாரணை
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சவுமியா சாவுக்கு பிரமோத், அவர்களின் பெற்றோர் தான் காரணம் என சவுமியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சொரப் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.