2024-ல் ஐ.டி. துறையில் ரூ.3.64 லட்சம் கோடி முதலீடு; அறிக்கை தகவல்
|2023-ம் ஆண்டில் நிச்சயமற்ற நிலை மற்றும் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதும், இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தன.
புதுடெல்லி,
டெல்லியில் இந்திய தலைமை தகவல் அதிகாரிகளுக்கான 13-வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடந்தது. இதில் சர்வதேச தகவல் கழகம் (ஐ.டி.சி.) சார்பில் நாடு முழுவதும் உள்ள தலைமை தகவல் அதிகாரிகள் (சி.ஐ.ஓ.) மற்றும் மூத்த ஐ.டி. தலைவர்கள் உள்ளிட்டோருக்கான தகவல் பகிரப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்தின் வருங்காலம் எல்லா இடங்களிலும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகம் என்பதற்கான டிஜிட்டல்மயமாதலை மீண்டும் நினைவுப்படுத்துவது என்ற தலைப்பில் இந்த உச்சி மாநாடு நடந்தது.
இதில், நடப்பு ஆண்டில் இந்தியாவில், தகவல் தொழில்நுட்பம் ஆனது 11 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவில் முதலீடு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 712 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் நிச்சயமற்ற நிலை மற்றும் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதும், டிஜிட்டல் துறையில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தன.
வாடிக்கையாளர்களின் வரவை அதிகரிக்க, அவர்களை திருப்திப்படுத்த, புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்த மற்றும் வருவாய்க்கான வளர்ச்சி மற்றும் லாபம் உள்ளிட்டவற்றை திறம்பட மேம்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தி இந்த முதலீடு அமைந்தது.
இந்த சூழலில், இந்த உச்சி மாநாட்டில், மென்பொருள், செயலிகள் மேம்பாடு உள்ளிட்ட தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களில் அதிக அளவில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என ஐ.டி.சி. தெரிவித்தது. இதனால், அவர்களின் வன்பொருட்கள் நீண்டகாலம் பணியாற்ற முடியும் என்பதுடன், மறுசுழற்சியும் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, 2024-ம் ஆண்டிலும் அதற்கு அடுத்தும், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்ந்து செழிப்படையும் சூழல் உள்ளது என தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வருகிற ஆண்டுகளில், இந்தியாவில் ஐ.டி. துறையின் முதலீடானது, கூட்டான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 9.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து 2027-ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 46 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மென்பொருள் சந்தையானது தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.