< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் முக்கியமான அலுவல்கள் மத்திய மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் முக்கியமான அலுவல்கள் மத்திய மந்திரி தகவல்

தினத்தந்தி
|
2 Sept 2023 4:15 AM IST

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் முக்கியமான அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறினார்.

பெங்களூரு,

பொதுவாக நாடாளுமன்றம் ஓராண்டில், பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என 3 கூட்டத்தொடர்களுக்கு கூட்டப்படும். தற்போது, இம்மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. 5 நாட்களுக்கு இத்தொடர் நடைபெறுகிறது.

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன்பு, ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்காக, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி நள்ளிரவில் ஒரு நாள் கூட்டமாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடந்தது.

இந்நிலையில், 18-ந் தேதி தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடரில் என்னென்ன மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் ஒரு செய்தி நிறுவனம் கேட்டது.

அதற்கு பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

சிறப்பு கூட்டத்தொடரில், முக்கியமான அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. அதற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

இன்னும் போதிய நேரம் இருக்கிறது. நிகழ்ச்சி நிரலை பகிர்ந்து கொள்வதற்கான கட்டாய கால அளவு பின்பற்றப்படும். விரைவில் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்