< Back
தேசிய செய்திகள்
குவைத்தில் இருந்து மும்பைக்கு சட்டவிரோத பயணம்; தமிழர்கள் 3 பேருக்கு 10-ந்தேதி வரை காவல்:  கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

குவைத்தில் இருந்து மும்பைக்கு சட்டவிரோத பயணம்; தமிழர்கள் 3 பேருக்கு 10-ந்தேதி வரை காவல்: கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
7 Feb 2024 6:58 PM IST

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மும்பை,

குவைத்தில் இருந்து மும்பையிலுள்ள கேட்வே ஆப் இந்தியா பகுதிக்கு சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று நேற்று வந்து சேர்ந்தது. அந்த படகில், இருந்தவர்களிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் சட்டவிரோத வகையில் நாட்டுக்குள் நுழைந்துள்ளது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்காக அவர்கள் குவைத்துக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களை அழைத்து சென்ற ஏஜெண்டு, 3 பேரையும் சரிவர நடத்தவில்லை என கூறப்படுகிறது. உணவு, சம்பளம் சரிவர கிடைக்காமல் இருந்துள்ளனர். இதனால், அவர்கள் குவைத்தில் இருந்து தப்பி வந்துள்ளனர் என அவர்களிடம் விசாரணை செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, மும்பைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததற்காக, பாஸ்போர்ட்டுகள் சட்டத்தின் தற்காலிக பிரிவுகளின் கீழ் கொலாபா போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த வினோத் அந்தோணி (வயது 29) மற்றும் சயா அந்தோணி அனீஷ் (வயது 29) என்றும் மற்றொருவர் ராமநாதபுரத்தின் நிடிசோ டிடோ (வயது 31) என்றும் தெரிய வந்தது.

அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில், அவர்கள் 3 பேருக்கும் வருகிற 10-ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

2008-ம் ஆண்டு நவம்பரில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்பு, அவர்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அவர்களில் அஜ்மல் கசாப் தவிர மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு கொன்றனர். கைது செய்யப்பட்ட கசாப்புக்கு, நீண்ட விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்