கர்நாடகத்தில் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பு
|கர்நாடகத்தில் விசா காலம் முடிந்த பின்பும் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் விசா காலம் முடிந்த பின்பும் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
754 பேர் சட்டவிரோதமாக தங்கல்
பெங்களூரு உள்பட மாநிலத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஏராளமானவர்கள் தங்கி இருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினர் போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் விசா காலம் முடிந்த பின்பும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் தங்கி இருப்பது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி, கர்நாடகத்தில் 754 பேர் விசா காலம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக தங்கி இருந்து வருவது தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் தங்குவதற்காக விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் 8,862 பேர் தங்கி இருந்து வருகின்றனர். ஆனால் 754 பேர் விசா காலம் முடிந்த பின்பும், எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தும் தங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
போலீசார் தீவிரமாக கண்காணிப்பு
பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 718 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் தங்கி இருப்பவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணித்து வருவதுடன், அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஏனெனில் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வெளிநாடுகளை சேர்ந்த 501 பேர் மீது வழக்குகள் உள்ளன. கர்நாடகத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல் தவிர சைபர் கிரைம் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், கைது செய்து நாடு கடத்துவதற்கான பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.