சிக்கமகளூருவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 4 பேர் கைது
|சிக்கமகளூருவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு;
வங்காள தேசத்தினர்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் போவி காலனி உள்ளது. இந்த பகுதியில் சட்டவிரோதமாக சிலர் தங்கி இருப்பதாக என்.ஆர்.புரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக வீடு எடுத்து தங்கி இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.அதில் அவர்களுக்கு கன்னடம் தெரியாது என்பது தெரியவந்தது. அவர்களது ஆதார் கார்டுகளை போலீசார் சோதனை செய்தபோது, அவை போலியானவை என்று தெரியவந்தது.
மேலும், விசாரணையில், அவர்கள் வங்காள தேசம் கோதாகிரி பகுதியை சேர்ந்த கைருல் (வயது 30), ருகுல் அமின் (40), மொமின் அலி (20), சலிம் (24) ஆகிய 4 பேர் என்பதும், அவர்கள் வேலைக்காக இந்தியாவுக்கு வந்து, பின்னர், சிக்கமகளூருவில் வாடகைக்கு வீடு எடுத்து கிடைத்த வேலையை செய்ததும் தெரியவந்தது.
சான்றிதழ்கள் பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லாமல் இங்கு சட்டவிரோதமாக தங்கி வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே அவர்களிடம் இருந்து பிறப்பு உள்ளிட்ட பிற சான்றிதழ்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.