அரசு நிலம் சட்டவிரோதமாக தனியாருக்கு பதிவு: மீன்வளத்துறை அதிகாரி அதிரடி கைது
|அரசு நிலத்தை சட்டவிரோதமாக தனியாருக்கு பதிவு செய்த மீன்வளத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு
பத்திரப்பதிவு
சிக்கமகளூரு மாவட்டம் கடூரை சோ்ந்தவர் உமேஷ். இவர் கடூர் தாசில்தாராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தற்போது உமேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கார்வாரில் மீன்வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடூர் புதிய தாசில்தாராக காந்தராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தாசில்தார் காந்தராஜ், கடூர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடூர் தாசில்தாராக இருந்த உமேஷ் மற்றும் ஊழியர்கள் நஞ்சுண்டா, பசவராஜப்பா ஆகியோர் உல்லஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக, அதே பகுதியை ேசர்ந்த சிலருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
வழக்குப்பதிவு
மேலும் சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நில பட்டா கொடுத்துள்ளார். இதன்மூலம் அவர்கள் அரசுக்கு சொந்தமான 1,000 ஏக்கர்களுக்கு மேலாக சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்ற போலீசார், அரசு நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக உமேஷ், நஞ்சுண்டா மற்றும் பசவராஜப்பா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் உமேஷ் பதுங்கி இருப்பதாக கடூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கைது
அதன்பேரில் கடூர் போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த உமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கடூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். உமேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதில் தொடர்புடைய நஞ்சுண்டா, பசவராஜப்பா ஆகிய 2 பேைரயும் போலீசார் தேடி வருகிறார்கள்.