சட்டவிரோத சுரங்க வழக்கு: ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை
|சட்டவிரோத சுரங்க வழக்கில் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 2021-ம் ஆண்டு தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில் ஹேமந்த் சோரன் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் கேட்டிருந்தார்.
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.