< Back
தேசிய செய்திகள்
சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஆஜர்
தேசிய செய்திகள்

சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஆஜர்

தினத்தந்தி
|
18 Nov 2022 1:41 AM IST

சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆஜரானார். இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறியாமல் பரபரப்பு தகவல்களை வெளியிடக்கூடாது என அவர் அமலாக்கத்துறையை கேட்டுக்கொண்டார்.

நிலக்கரி சுரங்க ஊழல்

முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற ஜார்கண்ட் மாநிலத்தில், சட்டவிரோதமாக ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முதல் கட்டமாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஷ்ரா மற்றும் பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

ஹேமந்த் சோரன் ஆஜர்

இந்த வழக்கில், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து விசாரணை தேதி 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. அதை 16-ந் தேதிக்கு மாற்றியமைக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் அவர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

வேண்டுகோள்

விசாரணையின்போது அவர் அமலாக்கத்துறையிடம் ஒரு வேண்டுகோள் கடிதத்தை வழங்கினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சட்டவிரோத சுரங்கங்கள் குறித்து உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறியாமல் பரபரப்பான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னாள் உறுப்பினர் ரவி கெஜ்ரிவால், பா.ஜ.க. தூண்டுதலால் இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

நேர்மையுடனும், பாரபட்சமற்ற முறையிலும் எந்த மறைமுக செயல்திட்டமும், நோக்கமும் இன்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்