< Back
தேசிய செய்திகள்
அழகில் மயங்கி பாரில் நடனமாடும் காதலிக்காக திருடனாக மாறிய ஐஐடியில் படித்த இன்ஜினியர்...!
தேசிய செய்திகள்

அழகில் மயங்கி பாரில் நடனமாடும் காதலிக்காக திருடனாக மாறிய ஐஐடியில் படித்த இன்ஜினியர்...!

தினத்தந்தி
|
21 April 2023 12:42 PM IST

காதல் எதுவும் செய்யும் என்பார்கள்... ஆனால் இங்கே ஒரு காதல் இன்ஜினியராக இருந்த ஒருவரை திருடனாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஹேமந்த் குமார் ரகு. ஐஐடியில் பொறியியல் படிப்பை படித்த ஹேமந்த், துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். வேலை நேரம் போக, அங்குள்ள இரவு நேர விடுதியில் நேரத்தை மகிழ்ச்சியாக ஹேமந்த் கழித்து வந்துள்ளார். பாரில் நடனமாடும் பெண்களின் நடன அசைவுகளை கண்டு வியந்த ஹேமந்த், அதில் பீகாரைச் சேர்ந்த நடன அழகியின் அழகில் மயங்கியுள்ளார். இருவரும் இந்தியர்கள் என்பதால், சுலபமாக பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில், அந்தப் பெண் மீதான அதீத ஆர்வத்தால், காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஹேமந்த்.

ஹேமந்த்தின் காதலை நடன அழகியும் ஒத்துக் கொள்ள, இருவரின் காதலும் சில நாட்கள் நல்லபடியாக சென்றுள்ளது. பாரில் நடனமாட வேண்டாம் என ஹேமந்த் கூற, அந்த வேலையை விட்டுள்ளார் அந்தப் பெண்.அதன் பிறகு, தான் கை நிறைய சம்பாதித்து வந்த பன்னாட்டு நிறுவனத்தின் பணியையும் விட்ட ஹேமந்த், பின்னர் இருவரும் பீகாருக்கு வந்து தங்கியுள்ளனர். அழகில் மயங்கிய காதல் என்பதால், காதலியை மகிழ்விக்க, 15 ஆண்டுகளாக சேமித்து வைத்த பணம் அனைத்தையும், காதலிக்காக தண்ணி போல செலவழித்துள்ளார் ஹேமந்த்.

ஒரு கட்டத்தில் பணமும் தீர்ந்து போயுள்ளது. காதலியை மகிழ்விக்க இனி என்ன செய்வது என யோசித்தபோது, ஹேமந்த் எடுத்த முடிவுதான் ஆச்சரியத்தை அளித்தது. வேலைக்கு சென்று மாதம் மாதம் சம்பாதிப்பதை விட, அதே பணத்தை ஒரே நேரத்தில் சம்பாதித்தால் எப்படி இருக்கும் என எண்ணிய ஹேமந்த், தனது ரூட்டை மாற்றியுள்ளார்.

அதாவது, ஐஐடி பொறியாளர் திருடனாக மாறியதுதான் சுவாரஸ்யம்...இப்படி, தனக்கென ஒரு டீமை பார்ம் பண்ணி, திருட்டு தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஹேமந்த் ஒரு கட்டத்தில் திருடர் குல திலகமாக மாறியிருக்கிறார். ஆனால், உழைக்காத பணம் நிலைக்காது என்பது போல, அவரது ஆட்டத்திற்கு முடிவு கட்டும் நாளும் வந்துள்ளது. கடந்த 11ம் தேதி, சாந்தி தேவி என்ற பெண்ணிடம் இரண்டே கால் லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹேமந்த் குமாரை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.

பின்னர் அவரிடம் இருந்து 51 ஆயிரம் ரூபாய் பணம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகள் என அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் போலீசார். தற்போது, அனைத்தையும் இழந்த ஹேமந்த், கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காதலிக்காக தனது பணத்தையும் வேலையும் இழந்து தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்