உங்கள் மனைவி சத்தம் போட்டால்... குடும்ப உறவுமுறை பற்றி ஓவைசி வழங்கிய அறிவுரை
|உங்களுடைய மனைவி மீது, தேவையின்றி கோபங்களை கொட்டுவது அல்லது அவரை அடிப்பது ஆண்மை தன்மை இல்லை என்று ஓவைசி கூறியுள்ளார்.
ஐதராபாத்,
ஏ.ஐ.எம்.ஐ.எம். அமைப்பின் தலைவர் மற்றும் எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஆண்கள் அவர்களுடைய மனைவிகளிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என கூறினார். அவர் தொடர்ந்து கூறும்போது, நான் பல முறை இதுபற்றி கூறியிருக்கிறேன். அது பலரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
உங்கள் மனைவி உங்களுக்கு துணி துவைத்து போட வேண்டும் என்றோ அல்லது உங்களுக்காக சமைத்து போடவோ, தலையை பிடித்து விடவோ குரான் கூறவில்லை.
உண்மையில், மனைவியின் ஊதியத்தில் கணவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றே கூறுகிறது. ஆனால், கணவரின் வருவாயில் மனைவிக்கு உரிமை உள்ளது. ஏனென்றால், இல்லத்தரசியானவள் வீட்டை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
உணவு சமைக்கவில்லை என்றோ, உணவில் உப்பு இல்லை என்றோ கூறும் சகோதரர்களே, அது பற்றி இஸ்லாமில் எங்கேயும் கூறப்படவில்லை. மனைவிகளிடம் கொடூரத்துடன் நடந்து கொள்பவர்கள், அவர்களை அடிப்பவர்கள் உள்ளனர்.
ஒரு பெண்ணை கூட எந்த இடத்திலும் நபி அடித்ததில்லை. அப்படி அடித்திருக்கிறார் என்றால், எந்த இடத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று நீங்கள் என்னிடம் கூறுங்கள் என்று ஓவைசி கூறியுள்ளார். தேவையின்றி கோபங்களை உங்களுடைய மனைவி மீது கொட்டுவது அல்லது அவரை அடிப்பது ஆண்மை தன்மை இல்லை. மனைவியின் கோபங்களை சகித்து கொள்வதே ஆண்மை என்றும் ஓவைசி கூறியுள்ளார்.