தொகுதி மக்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் கட்டாயம் - கங்கனா ரணாவத்
|கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்தைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
சிம்லா,
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
இமாச்சல பிரதேசம் நாடு முழுக்க இருந்த அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. எனவே மண்டி பகுதியில் இருந்து வருவோர் என்னைச் சந்திக்க ஆதார் அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும், மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் எதற்காக வருகிறீர்களோ அதை வெள்ளைத்தாளில் கடிதமாகவும் எழுதி எடுத்து வாருங்கள்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், சாமானியர்கள் நிறையச் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இமாச்சலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு நேரடியாக வரலாம். மண்டியில் உள்ளவர்கள் அங்குள்ள எனது எம்.பி. அலுவலகத்திற்கு வரலாம். இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படகூடாது என்பதற்காகவே ஆதார் எடுத்து வர சொல்கிறேன். மேலும், உங்கள் கோரிக்கை குறித்துத் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திப்பது நல்லதுதான். மண்டி தொகுதியில் இருக்கும் போது மக்களுடன் முழு நேரத்தையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10-ம் தேதி மண்டியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் இந்த முறையை அமல்படுத்தி உள்ளார். சுற்றுலா பயணிகள், ரசிகர்கள் என அனைவரும் வந்து செல்வதால் கங்கனா ரணாவத் தொகுதி மக்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரணாவத்தின் பேட்டிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இதுபோல செய்வது சரியானது இல்லை. மண்டி மக்களவைத் தொகுதியில் கங்கனா ரனாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், தன்னை சந்திக்க விரும்புவோர் ஆதார் அட்டையை எல்லாம் எடுத்து வரத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.