என்கிரிப்ஷனை நீக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்
|எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ நீக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசால் கடந்த 2021-ம் ஆண்டு 'தகவல் தொழில்நுட்பம் விதிகள்-2021' கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் அவர்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசின் புதிய விதிகள் கூறுகின்றன என சமூக வலைத்தள நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், இது தொடர்பாக மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாதிடும் போது கூறியதாவது:- "வாட்ஸ்அப்பின் பிரைவசி அம்சத்துக்காக தான் இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இல்லை. இந்த சட்டம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை உள்ளிட்டவற்றை மீறுகிறது.
இதுபோன்ற சட்டங்களால் லட்சக்கணக்கான செய்திகளை பல ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டிய நிலை உருவாகும். எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ நீக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வாட்ஸ் அப் வெளியேற வேண்டி இருக்கும்" என்று தெரிவித்தார்.