திரிணாமுல் காங்கிரசார் அறைந்தால்... மக்களே திருப்பி அறையுங்கள்: பா.ஜ.க. பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு
|திரிணாமுல் காங்கிரசார் உங்களை அறைந்தால் மக்களே அவர்களை திருப்பி அறையுங்கள் என பா.ஜ.க. கூட்டத்தில் பெண் எம்.பி. பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தீதிர் சுரக்சா கவச திட்டம் என்ற பெயரிலான நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் தத்தாபுகூர் பகுதியில் நடந்தது.
இதில், பா.ஜ.க.வை சேர்ந்த சாகர் பிஸ்வாஸ் என்ற நிர்வாகியின் கன்னத்தில் திரிணாமுல் காங்கிரசார் அறைந்தனர் என கூறப்படுகிறது. அவர் முறையற்ற சாலைகளின் நிலை பற்றி புகார் அளிப்பதற்காக பஞ்சாயத்து தலைவர்களை அணுகும்போது, இந்த சம்பவம் நடந்து உள்ளது.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் ஹூக்ளி மாவட்டத்தின் பாலகார் பகுதியில் நேற்று ஒரு கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. லாக்கட் சாட்டர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, உங்களை (பொதுமக்கள்) திரிணாமுல் காங்கிரசார் யாரேனும் அறைந்தால், உங்களது குறைகளை கேட்க அவர் விரும்பவில்லை என்றால், அந்நபரை ஒரு மரத்தில் கட்டி வையுங்கள். நான்கைந்து முறை அவரது கன்னத்தில் நன்றாக அறையுங்கள் என பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தொடர்ந்து பேசும்போது, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஏழைகளின் நலனுக்காக அவர்கள் பணியாற்றவில்லை. அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என கூறியதற்காக உங்களை அறைகிறார்கள் என்றால், அவரை நீங்கள் பதிலுக்கு கடுமையாக அறைந்து விடுங்கள் என கூறியுள்ளார்.
எனினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபை எம்.பி. சாந்தனு சென் கூறும்போது, எங்களது தலைவர் மம்தா பானர்ஜியின் வளர்ச்சி திட்ட பணிகளை பார்த்து பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது என்று இது எடுத்து காட்டுகிறது. அதனாலேயே, இதுபோன்ற சுவாரசியமற்ற விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என கூறியுள்ளார்.