கட்சி மேலிடம் அனுமதித்தால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்; எடியூரப்பா மகன் விஜயேந்திரா பேட்டி
|கட்சி மேலிடம் அனுமதித்தால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று எடியூரப்பா மகன் விஜயேந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதாவுக்கு பின்னடைவு
முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா கடந்த 23-ந் தேதி சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில், வருகிற சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் எனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று அறிவித்தார். எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜனதாவை சலசலப்பை உண்டாக்கியது. எடியூரப்பாவின் திடீர் அறிவிப்பு, பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. எடியூரப்பாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா மேலிடம் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து எடியூரப்பாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு விளக்கம் அளித்த எடியூரப்பா, சிகாரிபுரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறினார்.இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விஜயேந்திரா போட்டியிடுவார்
எனது தந்தை எடியூரப்பாவுக்கும், சிகாரிபுரா தொகுதி மக்களுக்கு இடையே வலுவான தொடர்பு உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. அங்குள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அழுத்தம் காரணமாக சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்தார். இந்த விஷயத்தில் கட்சி மேலிட தலைவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார்.
பா.ஜனதா மேலிடம் அனுமதி அளித்தால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். கட்சியை வளர்த்த எடியூரப்பாவுக்கு தனது அரசியல் வாரிசை அறிவிக்க சுதந்திரம் இல்லையா? என்று கேட்கிறீர்கள். பா.ஜனதா தேசிய கட்சி. அரசியல் வாரிசு என்ற பேச்சுக்கு இடமில்லை. கர்நாடகத்தில் எடியூரப்பா 30, 40 ஆண்டுகள் உழைத்து பா.ஜனதா கட்சியை வளர்த்தார் என்பது உண்மை தான். அதற்கேற்ப அவருக்கு கட்சி மேலிடம் உரிய பதவிகளை வழங்கி மரியாதை செய்துள்ளது. அதனால் கட்சியை மேலும் பலப்படுத்த அவரை மேலிடம் பயன்படுத்தி கொள்ளும். இதன் மூலம் பா.ஜனதா ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு விஜயேந்திரா கூறினார்.
மேலிடம் நிராகரித்தது
எடியூரப்பா தனது மகனை எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று மாநில பா.ஜனதா தலைவர்களிடம் கூறினார். அதனை ஏற்று எம்.எல்.சி. பதவி வழங்குமாறு கட்சி மேலிடத்திற்கு மாநில பா.ஜனதா பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை பா.ஜனதா மேலிடம் நிராகரித்தது. இதனால் எடியூரப்பா கடும் அதிருப்தி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.