< Back
தேசிய செய்திகள்
இது மட்டும் நடந்திருந்தால் எனது மகள் உயிருடன் இருந்திருப்பார்.. - கொல்கத்தா பெண் டாக்டரின் தந்தை

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

'இது மட்டும் நடந்திருந்தால் எனது மகள் உயிருடன் இருந்திருப்பார்..' - கொல்கத்தா பெண் டாக்டரின் தந்தை

தினத்தந்தி
|
18 Sept 2024 7:04 PM IST

சந்தீப் கோஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று தனது மகள் உயிருடன் இருந்திருப்பார் என கொல்கத்தா பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து சந்தீப் கோஷ் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், சந்தீப் கோஷ் மீது 2021-ம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தனது மகள் இன்று உயிருடன் இருந்திருப்பார் என கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சி.பி.ஐ. தனது வேலையை செய்கிறது. விசாரணையைப் பற்றி நாம் கருத்து எதுவும் சொல்ல முடியாது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள், ஆதாரங்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலைக்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் வேதனையுடன் போராட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படும் நாள்தான் நாங்கள் வெற்றி பெறும் நாளாகும்.

2021-ம் ஆண்டிலும், ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அன்று சந்தீப் கோஷ் மீது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று என் மகள் உயிருடன் இருந்திருப்பார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்