ஸ்பெயின் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கொடூரம்.. இந்தியர்கள் வெட்கப்படவேண்டும்: சின்மயி வேதனை
|சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாடகி சின்மயி, வேதனையுடன் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சில இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்போது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட முடியும் என்றால், சில ஆண்கள் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டால் இந்தியர்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும்" என சின்மயி தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணி, இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தனது கணவருடன் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.