நான் கமிஷன் கேட்டதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆவேசம்
|நான் கமிஷன் கேட்டதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் காண்டிராக்டர்களுக்கு பாக்கித்தொகையை பட்டுவாடா செய்யாதது ஏன்?. இதற்கான நடவடிக்கைகளை முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை ஏன் எடுக்கவில்லை. இந்த கேள்விகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் முதலில் பதிலளிக்க வேண்டும்.
கர்நாடக காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கேட்டுக் கொண்டதை அடுத்து திட்ட பணிகள் நடைபெற்றதா? இல்லையா? என்பதை அறிய முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கடந்த 3, 4 ஆண்டுகளாக பாக்கித்தொகைக்காக காண்டிராக்டர்கள் காத்திருந்தனர். இப்போது விசாரணை முடிவடையும் வரை காத்திருக்காமல் அவசரப்படுவது ஏன்?. இந்த அவசரத்தின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?.
10 முதல் 15 சதவீத கமிஷன் கேட்பதாக சில காண்டிராக்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கமிஷன் தொகையை கேட்டது யார்?. நான் கேட்டேனா?, சித்தராமையா கேட்டாரா?, மந்திரிகள் கேட்டனரா?, எம்.எல்.ஏ.க்கள் கேட்டனரா? என்று சொல்ல வேண்டும். நான் யாரிடமாவது கமிஷன் கேட்டிருந்தாலோ அல்லது நான் கமிஷன் கேட்டதாக நிரூபித்தாலோ இன்றே அரசியலை விட்டு விலகி விடுகிறேன். நான் கமிஷன் கேட்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், பசவராஜ் பொம்மை, ஆர்.அசோக் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்களா?.
அரசியலில் எனக்கு எனக்கே உரிய மரியாதை உள்ளது. காண்டிராக்டர்கள் செய்த பணிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணிகளை மேற்கொண்ட காண்டிராக்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். ஓரிரு மாதங்கள் காத்திருக்க முடியாதா?.
அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஜனநாயகத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜம். காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா மரியாதைக்குரிய நபர். அவரை பற்றி நான் குறை கூற மாட்டேன். அவரிடம் யாரும் கமிஷன் கேட்கவில்லை. ஒருவேளை அதிகாரிகள் யாராவது கமிஷன் கேட்டிருந்தால் அதுபற்றி ஒரு பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்யட்டும்.
ரோட்டில் செல்கிறவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் கேட்டால் நான் பதிலளிப்பேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.