கவர்னரும், முதல்-மந்திரியும் அரசியல் சட்டத்தின் வரம்பிற்குள் இருந்து கொண்டால் சிரமம் இருக்காது - ஆனந்த போஸ்
|மம்தா பானர்ஜியை மரியாதைக்குரிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரியாக பார்க்கிறேன் என வங்காள கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னராக இருந்த ஜெக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், மேற்கு வங்காள கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்துக்கு புதிய கவர்னரை மத்திய அரசு நியமித்து உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இவர் மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இந்த நிலையில், கவர்னரும், முதல்-மந்திரியும் அரசியல் சட்டத்தின் வரம்பிற்குள் இருந்து கொண்டால் சிரமம் இருக்காது என ஆனந்த் போஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், வங்காளம் ஒரு பெரிய மாநிலம். வங்காள மக்களுக்கு சேவை செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நான் கவர்னர் பதவியை ஒரு பெரிய பதவியாக பார்க்கவில்லை மாறாக மக்கள் நலனுக்காக என்னை அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பாக பார்க்கிறேன்.
அரசியல் சூழ்நிலைகள் எப்பொழுதும் நிலையற்றதாக இருக்கும். மேற்கு வங்காளத்தில் தற்போது நிலவும் அரசியல் அமைப்பானது மேல்நோக்கிப் போராட்டமாக இருக்காது.
மம்தா பானர்ஜியை மரியாதைக்குரிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரியாக நான் பார்க்கிறேன். நான் திறந்த மனதுடன் அவருடன் பணியாற்றுவேன். கவர்னரும், முதல்-மந்திரியும் அரசமைப்பு சட்டத்தின் வரம்புக்குள் இருந்து கொண்டால், எந்த சிரமமும் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.