< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்கரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம் - அமித்ஷா உறுதி
தேசிய செய்திகள்

சத்தீஷ்கரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் 'ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம்' - அமித்ஷா உறுதி

தினத்தந்தி
|
17 Oct 2023 6:28 AM IST

சத்தீஷ்கரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம் என்றும் அமித்ஷா உறுதிபட கூறியுள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கரில் அடுத்த மாதம் (நவம்பர்) 7 மற்றும் 17-ந் தேதி என 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள ராஜ்நந்கான் நகரில் நேற்று நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சத்தீஷ்கரில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றுள்ளன. முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், மாநிலத்தை டெல்லி தர்பாரின் ஏ.டி.எம்.மாக மாற்றி விட்டார். ஓட்டல்களில் உணவு சங்கிலியைப்போல டெல்லி வரை காங்கிரஸ் கட்சி ஊழல் சங்கிலியை உருவாக்கி இருக்கிறது.

சத்தீஷ்கரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். அத்துடன் அவர்கள் தலைகீழாக தொங் விடப்படுவார்கள். சத்தீஷ்கர் மாநிலம் மத்திய பிரதேசத்துடன் இணைந்து ஒன்றுபட்ட மாநிலமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மிகவும் பின்தங்கி இருந்தது. ஆனால் கடந்த 2003-ம் ஆண்டு பா.ஜனதாவின் ராமன் சிங் ஆட்சிக்கு பிறகு சத்தீஷ்கர் மாநிலம் 15 ஆண்டுகளாக வளர்ச்சியடைந்தது.

மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்யும் காங்கிரசின் பூபேஷ் பாகேல் அரசு மிரான்பூரில் வகுப்புவாத வன்முறைகளுக்கு காரணமாக இருந்தது. இந்த மாநிலம் வன்முறைகளின் மையமாக மீண்டும் மாறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?. சத்தீஷ்கரில் அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்கு வங்கிக்காக திருப்திபடுத்தும் அரசியலையே மீண்டும் தொடரும்.

வரவிருக்கும் தேர்தல்கள் எந்த அரசையோ அல்லது எம்.எல்.ஏ.க்களையோ தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாறாக பிரதமர் மோடியின் தலைமையில் ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்கானது. மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ந்தேதி தாமரை மலரும் என்பதையே இங்கு கூடியிருக்கும் மக்களிடையே கரைபுரளும் உற்சாகம் காட்டுகிறது.

இவ்வாறு உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்