அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவரானால் முதல்-மந்திரி பதவி யாருக்கு? 10 விசயங்கள்...
|காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை சச்சின் பைலட் பெறுவதற்கான 10 விசயங்கள் முன் வைக்கப்படுகின்றன.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலுக்கான போட்டியில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சசி தரூர், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் இறங்க கூடும் என கூறப்பட்டு வருகிறது. கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், டெல்லியில் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேச கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற்றால் இரட்டை பதவியை பெற அவர் விருப்பமுடன் உள்ளார் என கூறப்படுகிறது.
எனினும், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அவரது எதிரியான சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், காந்தி குடும்பத்தினரின் ஆதரவு பைலட்டுக்கு உள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், கெலாட் தலைவர் பதவியில் வெற்றி பெற்றால், தனது முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்க ஒப்பு கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கேற்ப 10 விசயங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவை:
1) காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் 2018-ம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆவதற்கான முயற்சியில் பைலட் உள்ளார் என்றும் அதற்கு காந்தி குடும்பத்தினரின் ஆசிகளும் உள்ளன என கூறப்படுகிறது.
2) 2020-ம் ஆண்டில் பைலட்டை துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேற்றிய பின்னர், பைலட்டை தடுத்து நிறுத்தும் அனைத்து முயற்சிகளையும் முடிந்தவரை கெலாட் செய்து விட்டார் என கூறப்படுகிறது. ஆனால், ஒரே நபர், ஒரே பதவிக்கு ராகுல் காந்தி இன்று ஆதரவு அளித்து உள்ளார்.
3) கேரளாவில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒரே நபர், ஒரே பதவி விதிமுறை பின்பற்றப்படும் என்றும் அது அசோக் கெலாட்டுக்கும் பொருந்தும் என்ற வகையில் கூறினார்.
4) காந்தி குடும்பத்தினரின் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வாக 71 வயது ஆகும் கெலாட் இருந்தபோதும், முதல்-மந்திரி பதவியை விட்டு விலக வேண்டும் என்பது கெலாட்டுக்கு நெருடலாக உள்ளது என கூறப்படுகிறது.
5) ஒரு வேளை, கெலாட்டுக்கு மாற்று ஆள் யாரென பார்த்தால், அது அவரது எதிரியான சச்சின் பைலட்டாக இருக்கிறார். பைலட்டால், 2020-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டிய சூழலுக்கு கெலாட் தள்ளப்பட்டார்.
6) நேற்றைய தினம் ராகுல் காந்தியுடன், கேரளாவில் பைலட் ஒன்றாக யாத்திரையில் பங்கேற்றார். ஆனால், கெலாட் வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் இன்று காலை பைலட் புறப்பட்டு சென்று விட்டார்.
7) கெலாட் கூறும்போது, தலைவர் பதவிக்கான தேர்தலில் மனு தாக்கல் செய்வதற்கு முன், கடைசியாக ஒரு முறை காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரும்படி அவரை இணங்க வைக்க முயற்சிப்பேன் என்று கூறினார். ஆனால், 2019-ல் பதவி விலகலுக்கு பின்னர், மீண்டும் அந்த பதவிக்கு வரமாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
8) இடைக்கால தலைவர் சோனியாவை நேற்று மாலை கெலாட் சந்தித்து பேசினார். அதற்கு முன், ஒரு நபர் மந்திரியாகவும் தொடரலாம். காங்கிரஸ் தலைவராகவும் தேர்வு பெறலாம். கட்சிக்கு நன்மை எனில் நான் எது வேண்டுமென்றாலும் செய்வேன். அது ஒரு பதவி, இரு பதவிகள் அல்லது மூன்று பதவிகள் என எதுவாக இருப்பினும் நான் பின்வாங்க மாட்டேன் என சந்திப்புக்கு முன்பு கூறினார்.
9) கட்சியின் மூத்த தலைவரான கே.சி. வேணுகோபால், ஒரே நபர், ஒரே பதவி விதிமுறை பற்றி பேசும்போது, தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் வெற்றி பெறுகிறார்கள் என்பதனை சார்ந்தது அது என கூறினார். ஆனால், ராகுல் காந்தியின் உறுதியான பதில் அதற்கான இடமில்லை என்றே கூறப்படுகிறது.
10) கட்சியின் அடுத்த தலைமைக்கு நீங்கள் என்ன கூறுவீர்கள் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதிலில், எனது அறிவுரை, காங்கிரஸ் தலைவராக யார் வருகிறார் என்றாலும், அவர் யோசனைகளின் களஞ்சியம் ஆக தன்னை பிரதிபலிக்க வேண்டும். நம்பிக்கைக்குரிய நபராகவும், இந்தியாவை பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார்.