'இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்' - அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
|இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
காங்கர்,
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்காரில், பா.ஜனதா கட்சி தீவிர களப்பணிகளை ஆற்றி வருகிறது. அந்த கட்சி சார்பில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பழங்குடியினர் அதிகமாக வாழும் காங்கர் மாவட்டத்தில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்தார். தனது உரையில் அவர் கூறியதாவது:-
இடதுசாரி பயங்கரவாதம்
பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவான நாடாக உருவாகி இருக்கிறது. இனியும் பலவீனமாக இருக்கப்போவது இல்லை.
எங்களுக்கு யாரும் தீங்கு செய்ய நினைத்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எங்கள் அண்டை நாடுகளுக்கு சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு மேற்கொண்ட வலிமையான நடவடிக்கைகளால் இடதுசாரி பயங்கரவாதம் வீழ்த்தப்பட்டு வருகிறது. தற்போது வெறும் 10 முதல் 12 மாவட்டங்களில் மட்டுமே இதன் தாக்கம் உள்ளது. சத்தீஷ்காரில் ஆளும் காங்கிரஸ் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருந்தால், இங்கு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் முற்றிலும் துடைத்து எறியப்பட்டு இருந்திருக்கும்.
கட்டாய மதமாற்றம்
சத்தீஸ்காரில் குறிப்பாக, பஸ்தாரில் கட்டாய மதமாற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டில் வாஜ்பாய் கொண்டிருந்த உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியோ, நாடு விடுதலை அடைந்தபின்பு தனக்கும், தனது அரசியலுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்தது. பழங்குடியினரை கண்டுகொள்ளவில்லை என்று ராஜ்நாத் சிங்கூறினார்.