< Back
தேசிய செய்திகள்
ஏழை மக்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் 10 கிலோ இலவச அரிசி வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும்; பசவராஜ் பொம்மை எச்சாிக்கை
தேசிய செய்திகள்

ஏழை மக்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் 10 கிலோ இலவச அரிசி வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும்; பசவராஜ் பொம்மை எச்சாிக்கை

தினத்தந்தி
|
19 Jun 2023 2:03 AM IST

ஏழை மக்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும் என்று மாநில அரசுக்கு பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உப்பள்ளி:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உத்தரவாத திட்டங்கள்

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டதாக அவர் சொல்கிறார். அவர் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தற்போது அரிசி கிடைக்கவில்லை என்று காரணங்களை சொல்கிறார்கள்.

இது காங்கிரஸ் தனது உத்தரவாத திட்டங்களில் இருந்து பின்வாங்கிவிட்டதை காட்டுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அரிசியை கொண்டு வருவதாக சித்தராமையா கூறியுள்ளார். ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். கர்நாடக விவசாயிகள் அரிசி கொடுக்க முன்வந்தால் அரசு அதை கொள்முதல் செய்ய வேண்டும்.

பா.ஜனதா போராட்டம்

பா.ஜனதாவினரே அரிசியை கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை வருகிற 1-ந் தேதி ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசியை வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது. 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் இந்த அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சித்தராமையா காணொலி மூலம் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டார். வறட்சி உள்ள பகுதிகளில் செயல்படையை அமைக்க வேண்டும். இந்த அரசுக்கு மக்கள் மீதான அன்பு நீண்ட நாள் நீடிக்காது என்று கருத தோன்றுகிறது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சட்டசபை கூட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்