< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகின்றன: ராகுல்காந்தி
தேசிய செய்திகள்

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் 'மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகின்றன': ராகுல்காந்தி

தினத்தந்தி
|
29 Jan 2024 10:44 PM IST

நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதே பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தமாக உள்ளது என்று ராகுல்காந்தி கூறினார்.

பாட்னா,

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணம், இன்று பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தது. சீமாஞ்சல் பகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இந்த யாத்திரை நடந்தது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த மாவட்டம், காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது.

கிஷன்கஞ்ச் மாவட்டத்துக்கு வந்த ராகுல்காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதே பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தமாக உள்ளது. சாதி, மதம், மொழியின் பெயரால் மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகின்றன.

சகோதரர்கள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்கின்றனர். இந்த சூழலைத்தான் நாடு முழுவதும் பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் உருவாக்கி உள்ளன. ஆனால் நாங்களோ மக்களை ஒன்றுபடுத்த உழைக்கிறோம். வெறுப்புச்சந்தையில் அன்புக்கடை திறக்க விரும்புகிறோம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

மேலும் செய்திகள்