எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்திய விவகாரம்-அறிக்கை கேட்ட கவர்னர்
|எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியது தொடர்பாக அறிக்கை வழங்கும்படி தலைமை செயலாளருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:-
10 பேர் இடைநீக்கம்
மத்திய அரசுக்கு விரோதமாக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. பெங்களூருவில் கடந்த 17, 18-ந் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சியின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தலைவர்களை வரவேற்று உபசரிக்கும் பணிக்கு கர்நாடக அரசு சில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியது. இதை மாநில அரசு ஒப்புக்கொண்டது. இதை கண்டித்து பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை, மேல்-சபையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கவா்னர் உத்தரவு
மேலும் பா.ஜனதா,ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து, அரசியல் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்திய கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பதாக கவர்னர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தி விவகாரம் குறித்து அறிக்கை வழங்கும்படி தலைமை செயலாளர் வந்திதா சர்மாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலாளர் அறிக்கை வழங்கியதும், அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்புவார் என்று கூறப்படுகிறது.