< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்த வழக்கில் இருந்து தன் பெயரை நீக்க ஐஏஎஸ் அதிகாரி மனு
தேசிய செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்த வழக்கில் இருந்து தன் பெயரை நீக்க ஐஏஎஸ் அதிகாரி மனு

தினத்தந்தி
|
20 Sep 2022 3:51 PM GMT

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீநகர்,

2010-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர் காஷ்மீரை சேர்ந்த ஷா பைசல். காஷ்மீரை சேர்ந்த நபர் சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது அதுவே முதல் முறையாகும். இதனை தொடர்ந்து ஷா பைசல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பின்னர், ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகிய பைசல் ஜம்மு-காஷ்மீர் மக்கள் முன்னேற்றம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து ஷா பைசல் உள்பட 7 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதேவேளை, தான் புதிதாக தொடங்கிய கட்சியை கலைத்த ஷா பைசல், தான் மீண்டும் ஐஏஎஸ் பணிக்கு திரும்ப விரும்புவதாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கடந்த ஏப்ரல் அவரது ராஜினாமாவை நிராகரித்து அவருக்கு மீண்டும் ஐஏஎஸ் பணி வழங்கியது.

இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இருந்து தன் பெயரை நீக்க அனுமதிக்குமாரு ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

ஷா பைசல் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்துக்கு எதிரான வழக்கில் இருந்து அவரது பெயர் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்