ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி புகார்
|3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க உதவி செய்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் புகார் அளித்து உள்ளார்.
எலகங்கா:
ரோகிணி சிந்தூரி
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி (வயது 38). ஆந்திராவை சேர்ந்த இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். ஆனால் சமீபகாலமாக ரோகிணி சிந்தூரி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மைசூரு மாவட்ட கலெக்டராக அவர் பணியாற்றிய போது, ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ. சா.ரா.மகேசுடன் அவர் மோதல் போக்கை கடைப்பிடித்தார்.
இதனால் ரோகிணி சிந்தூரி மீது சா.ரா.மகேஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு ரோகிணி சிந்தூரியும் சளைக்காமல் பதிலடி கொடுத்தார். இதன்பின்னர் அவர் அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் பெங்களூருவில் பணி செய்து வருகிறார்.
3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் டுவிட்டர் வழியாக புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், நான் மறைந்த நகைச்சுவை நடிகர் மெகமூத் அலியின் மகன். எனது பெயர் மக்சூத் முகமது அலி. பாடகரான நான் லக்கி அலி என்ற பெயரில் அறியப்படுகிறேன். நான் தற்போது துபாயில் உள்ளேன். பெங்களூரு எலகங்கா கெஞ்சனஹள்ளி பகுதியில் எனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை நில மாபியாக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ளனர்.
இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியின் கணவர் சுதீர் ரெட்டி, அவரது உறவினர் மது ரெட்டி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய ரோகிணி சிந்தூரியும் உடந்தையாக இருந்து உள்ளார். எனது நிலம் ஆக்கிரமிப்பட்டது குறித்து ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தேன். அங்கும் எனது புகார் ஏற்கப்படவில்லை.
சட்டப்போராட்டம்
சுதீர் ரெட்டி மீதான புகாரை ஏற்க கூடாது என்று போலீசாரை, ரோகிணி சிந்தூரி மிரட்டி உள்ளார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் 7-ந் தேதி (நாளை) இறுதி விசாரணை நடக்க உள்ளது. அப்போது பொய்யான ஆவணங்களை சமர்பிக்க சிலர் முயற்சி செய்து உள்ளனர். இந்த சட்டவிரோத செயலை நிறுத்த உதவி செய்யுங்கள் என்று புகாரில் கூறி இருந்தார். ரோகிணி சிந்தூரி மீது பாடகர் லக்கி அலி அளித்து உள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி கூறுகையில், 'பாடகர் லக்கி அலியுடனான நிலப்பிரச்சினையில் எனது கணவர் சுதீர் ரெட்டி சட்டரீதியாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர் கோர்ட்டில் இருந்து தடை உத்தரவு வாங்கி உள்ளார்' என்றார்.
லக்கி அலி மீது வழக்கு
இதற்கிடையே லக்கி அலி மீது எலகங்கா நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் ரோகிணி சிந்தூரியின் உறவினரான மதுசூதன் ரெட்டி ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 2016-ம் ஆண்டு லக்கி அலியின் சகோதரரிடம் இருந்து கெஞ்சனஹள்ளி பகுதியில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினோம்.
ஆனால் அந்த நிலம் தொடர்பாக லக்கி அலி எங்கள் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வருகிறார். எங்கள் குடும்பத்தினரையும் தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் லக்கி அலி மீது எலகங்கா நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
டி.ஜி.பி.யுடன் ஆலோசனை - மந்திரி அரக ஞானேந்திரா
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீதான புகார் குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி உதவியுடன் தனது நிலம் ஆக்கிரமிப்பட்டு இருப்பதாக பாடகர் லக்கி அலி, டி.ஜி.பி.யிடம் புகார் அளித்து உள்ளார். அந்த புகார் குறித்து டி.ஜி.பி. பிரவீன் சூட்டுடன், ஆலோசனை நடத்துவேன். லக்கி அலி எந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார், அவரது புகாரை எந்த போலீஸ் நிலைய போலீசார் வாங்க மறுத்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.