தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு; முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் தொடர்ந்தார்
|தன்னை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியிடம் ரூ.1 கோடி கேட்டு முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் மைசூரு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூரு:
ஐ.ஏ.எஸ். அதிகாரி
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ரோகிணி சிந்தூரி. இவர் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்து வருகிறார். இவர் இதற்கு முன்பு மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்தார். அப்போது அரசு அனுமதி பெறாமல் கலெக்டர் வீட்டில் நீச்சல் குளம் கட்டியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ., ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீதான பல்வேறு முறைகேடு புகார்கள் குறித்து பேசினார்.
முறைகேடு
அப்போது ஏழைகளுக்கு துணி பைகளை வினியோகித்ததில் ரூ.6 கோடியை ரோகிணி சிந்தூரி முறைகேடு செய்ததாகவும் கூறினார். ஒரு துணி பை தலா ரூ.13 வீதம் மொத்தம் ரூ.14.71 லட்சத்துக்கே துணிப்பைகள் வாங்கப்பட்டதாகவும், ஆனால் அதை ரூ.6 கோடியாக கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் ரோகிணி சிந்தூரி இதுபற்றி தனது தோழியுடன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் அவர், 'சா.ரா.மகேஷ் சிறைக்கு செல்ல வேண்டும், அவர் சிறைக்கு சென்று கம்பி என்ன வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
வழக்கு
உண்மையிலேயே அந்த ஆடியோவில் பேசியிருப்பது ரோகிணி சிந்தூரிதானா என்று விசாரணை நடந்து வரும் நிலையில், தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து பேசிய ரோகிணி சிந்தூரி மீது ரூ.1 கோடி கேட்டு சா.ரா.மகேஷ் மைசூரு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அடுத்த மாதம்(அக்டோபர்) 20-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் கோர்ட்டில் ரோகிணி சிந்தூரி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு சம்மன் அனுப்ப ஆணை பிறப்பித்துள்ளார். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் ரோகிணி சிந்தூரிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.