நெடுஞ்சாலையில் இறங்கி ஏறிய விமானப்படை போர் விமானங்கள்
|உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் இறங்கி ஏறும் பயிற்சியில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் நேற்று ஈடுபட்டன.
சுல்தான்பூர்,
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ முதல் காஜிப்பூர் வரை செல்லும் 341 கி.மீ. பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் இறங்கி ஏறும் பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய், மிராஜ் போர் விமானங்கள் நேற்று ஈடுபட்டன. அதற்காக இந்த நெடுஞ்சாலையின் குரேபார் பகுதியில் 12 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
திரண்ட கிராமத்தினர்
இந்த நிகழ்ச்சியை ஜெய்சிங்பூர் எம்.எல்.ஏ. ராஜ் பாபு, மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஜஜித் கவுர், எஸ்.பி. சோமன் பர்மா மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
மேலும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் திரண்டு இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் இறங்கி ஏறி பறந்தபோது அவர்கள் உற்சாக ஒலி எழுப்பினர்.
குறுக்கே ஓடிய நாய்
முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த பயிற்சி நிகழ்ச்சி 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது நெடுஞ்சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அவ்வாறு நாய்கள் குறுக்கே செல்லாமல் தடுப்பதற்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.