< Back
தேசிய செய்திகள்
கல்வான் மோதல்: 68 ஆயிரம் வீரர்கள், டாங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சீன எல்லையில் களமிறக்கிய இந்தியா - பரபரப்பு தகவல்
தேசிய செய்திகள்

கல்வான் மோதல்: 68 ஆயிரம் வீரர்கள், டாங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சீன எல்லையில் களமிறக்கிய இந்தியா - பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
13 Aug 2023 9:53 PM IST

கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன.

டெல்லி,

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் இருந்து படைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா - சீனா இடையேயான 19ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கல்வான் மோதலை தொடர்ந்து லடாக் எல்லையில் இந்தியா அதிக அளவில் படைகளை குவித்தது தற்போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் உயர்மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

கல்வான் மோதலுக்கு பின் லடாக் எல்லைப்பகுதியில் சுகோய் சு-30 மற்றும் ஜாகுவார் ரக போர் விமானங்கள் களமிறக்கபட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. உளவு தகவல்கள் மற்றும் எதிரிகளின் கடுமானபணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதல் நடத்துவதற்காக போர் விமானங்கள் குவிக்கபட்டுள்ளன.

லடாக் எல்லையில் பாதுகாப்புப்பணிக்காக குறுகிய காலத்திற்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானபடை விமானங்கள் மூலம் பாதுகாப்புப்படை வீரர்கள் லடாக் விரைந்தனர். அதிக அளவில் ஆயுதங்களும் விமானப்படை விமானங்கள் மூலம் லடாக் கொண்டு செல்லப்பட்டன.

சீன வீரர்களின் நடவடிக்கையை அறிய ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லா உளவு விமானங்களும் எல்லையில் பயன்படுத்தப்பட்டன. இந்திய விமானப்படை சி-17 குளோப மாஸ்டர் உள்ளிட்ட விமானங்கள் மூலம் 9 ஆயிரம் டன் சரக்குகள் லடாக் பகுதிக்கு கையாளப்பட்டுள்ளன.

கல்வான் மோதலை தொடர்ந்து ரபேல், மிக் -29 உள்பட அதிக அளவிலான போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வெடிபொருட்கள், ஆயுதங்கள், ராணுவ ஆயுதத்திற்கான உபகரணங்களை மலைப்பகுதிக்கு கொண்டு வரவும், வீரர்களின் தற்காலிக தங்குமிடம் அமைப்பதற்கான கட்டுமானங்களை கொண்டு வருவதற்காகவும் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் சுகோய் சு 30 மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எல்லையில் ரேடார்கள் நிறுவப்பட்டு பல்வேறு வகையிலான நிலத்தில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை எல்லைப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ராணுவ நிலைகள் மற்றும் படையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், எதிரிகளின் நிலைகளை கண்காணிக்கவும் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய விமானப்படை கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக விமானப்படையின் இந்த நடவடிக்கை ஆபரேஷன் பரக்ரம்மின் போது மேற்கொள்ளப்பட்டதை ஒத்தானதாகும் என கூறப்பட்டுள்ளது. ஆபரேஷன் பரக்ரம் என்பது 2001ம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நாட்டின் எல்லையோரம் அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து படைகள் விமானப்படை மூலம் எல்லைக்கு கொண்டு வரப்பட்டது.

கல்வான் மோதலுக்கு பின் தயார் நிலையை உறுதி செய்ய ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அருணாச்சலபிரதேசத்தின் மலைப்பாங்கான எல்லைப்பகுதிகளில் எம்-777 ரக பீரங்கிகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தயாரிப்பான அனைத்து நிலப்பரப்பிலும் பயன்படுத்தக்கூடிய ராணுவ வாகனம், இஸ்ரேலிய அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் அருணாச்சலப்பிரதேச எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு அதிக அளவில் ராணுவம் ஒதுக்கியுள்ளது.

அதேபோல், கல்வான் மோதலை தொடர்ந்து ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து 68 ஆயிரம் வீரர்கள் விமானப்படை விமானங்கள் மூலம் லடாக் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ டாங்கிகள், ரேடார் அமைப்பு, பீரங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் லடாக் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையேயான பதற்றம் அதிகரித்த நிலையில் தற்போது இரு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் படைகளை தற்போது மெல்ல குறைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்